Sunday, October 26, 2008

என் வீடு இறந்து கொண்டிருக்கிறது...

வீடு என்பது வெறும் கட்டிடங்கள் மட்டும் இல்லை. அதற்கும் உயிர் உண்டு... நாம் எத்தனை வருடங்கள் அதில் வாழ்கிறோமோ, அத்தனை வருங்களும் அந்த வீடும் உயிர்ப்புடன் இருக்கும்... வீட்டை விட்டு விலகி செல்ல செல்ல அந்த வீடு இறக்க தொடங்குகிறது... தூத்துக்குடியில் நான் இருந்த வீட்டுக்கும் அதே கதி தான் நெருங்கி கொண்டிருக்கிறது...
நான் பிறந்த வருடங்களில் வீடும் என்னுடன் வளர்ந்தது என்னுடைய முதல் வயதில் நான் அந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.., விசாலமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் எங்களின் குடும்பத்திற்கு அந்த வீடே போதுமானதாக இருந்தது.. அம்மாவின் தயவால் வீட்டை சுற்றிலும் நிறைய பூஞ்ச்செடிகள் இருந்தன..
மொத்தம் ஐந்து செண்டு நிலமுள்ள வீட்டின் பக்கத்தில் நிறைய இடம் உண்டு... அங்கு ஒவ்வொரு சின்ன சின்ன இடங்களும் எனக்கு பரிச்சயம்... அம்மாவின் இறப்பு, அப்பாவின் இறப்பு, கவிதாவுக்கான நான் ஏங்கி அழுதவை, என்னுடைய இருபத்து நான்கு வயது வரையிலான அதிகபட்ச சந்தோசம், துக்கம், பரபரப்பு என எல்லாவற்றையும் என் வீட்டின் ஒவ்வொரு சுவரும் நன்றாகவே அறியும்...
அம்மா இறந்த போது வீட்டுக்கு கொஞ்சம் உடல் நலம் பாதிக்கப்பட்டது... அதை பேணுவதற்கு யாரும் இல்லை... பூஞ்ச்செடிகள் இருந்த இடம் வெறுமனே இருந்தது.... அப்பா இறந்த சமயத்தில் வீட்டுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டது.. அங்கு முனிப்பாய்ச்சல் இருப்பதாகவும், பேய நடமாட்டம் இருப்பதாகவும் சுற்றியிருப்பவர்களின் புலம்பல் அதற்கு கேட்டிருக்குமோ என்னவோ அதன் பிறகு அது உயிர் தன்மையை இழந்தது ...
நான் பிறந்ததில் இருந்தது அந்த வீட்டுக்குள்ளேஎ வாழ்ந்து விட்டேன்.. இப்போது வேலைக்காக ஊர் மாற்றி வந்தாலும்... ஊருக்கு செல்வதே அந்த வீட்டில் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான்... அங்குதான் என் அன்பான அம்மா, அப்பாவின் உணர்வுகள் மிச்சமிருக்கின்றன...
பள்ளி, கல்லூரி நண்பர்கள் என எப்போதும் என் நண்பர்களிடத்து அந்த வீடு முக்கியத்துவம் பெற்றது... படம் பார்க்க செல்வதென்றாலும் சரி, படிப்பதேன்றாலும் சரி, ஊருக்கு செல்வதென்றாலும் சரி அந்த திட்டங்கள் எல்லாம் என் வீட்டின் மாடியில் இருந்தே தீட்டப்படும். .
இப்போது அதை சீண்டுவார் யாரும் இல்லை. . அதை பராமரித்து அன்பு காட்ட யாரும் இல்லை என்று என் வீடு தன்னைத் தானே தற்கொலை செய்யும் அளவுக்கு போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... வீடு இறக்க தொடங்கியிருக்கிறது... நான் பிறந்து வளர்ந்த இடம் சிதிலமடைய தொடங்கியிருக்கிறது... வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது என்னால்ல்ல்ல்.....
விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா....

Tuesday, September 23, 2008

கதை தொடருகின்றது ....

கதைக்களம் விரிவடையாமல் போனால் என்ன ஆகும்... கதைக்களத்தை விரிவாக்காமல் எந்த கதாசிரியனாலும் கதை சொல்ல முடியாதா.. அது முடிந்தால் என்ன, முடியாவிட்டால் எனக்கென்ன???

கதைக்களம் போலவே இபோதெல்லாம் என்னுடைய வாழ்க்கை தளமும் சுருங்கி கொண்டே வருகிறது...

வர வர யாரிடமும் பேச பிடிக்கவில்லை... குட்டிக்கு மிகவும் மவுனமாக இருக்க வே பிடிக்கிறது...
ஏதோ இந்த வேலை... நேரத்துக்கு நினைத்த உணவு என்று இருந்து விட்டு போக பிடிக்கலை... அதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒரு விஷயத்திற்காக மனது அலைபாய்கிறது... எதையோ தேடுகிறான். ஆனால் அது என்னவென்றே புரியாமல்.. என்னிடம் பதில் இருக்கிறது... ஆனால் கேள்விகள் இல்லை.. அதை கேட்பதற்கும் யாரும் இல்லை...
வாழ்க்கையில் அடுத்த பிறவி என்று இருந்தால் நிறைய சொந்தங்கள் , என்னை விரும்பும் காதலி... ஏராளமான நண்பர்களுடன் பிறக்க வேண்டும்... தனிமை என்னுள் விதிக்கப்பட்டிருக்கிறது... அது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வளர்ச்சியை காண்கிறது....
அது விருட்சமாகும் பொது ????? நான் என்னுடைய உலகத்திற்கு சென்று விடுவேன். அது தனியான உலகம் அங்கு இந்த உலக சிந்தனைகளுக்கு இடம் இருக்காது... குட்டி இந்த பிளாக்கில் எழுதுவது இருக்காது.. எல்லாம் முடிந்து போகும்...
மரணம் எப்படி இருக்கும்... யோசித்து பார்க்கிறேன்.. எனக்குள்ளும் லேசான பயமா? இல்லை அது எப்படி இருக்கும் என்று தெரியாத ஒரு எதிர்பார்ப்பா என்று தெரியவில்லை... மரணம் முடிந்ததும் என்ன ஆகும்??? என்னுடைய இப்படிப்பட்ட சிந்தனைகள் கூட அங்கு இருக்காதே...
வணராஜின் தாயார் மறைந்து விட்டார்கள்... அவர்களின் கையால் குடித்த தேநீரின் சுவையும், முட்டைக் குழஅம்பின் வாசமும் இன்னமும் இருக்கிறது.. மனது மிகவும் வருத்தப்பட்டது... மரணம் நம்மை சுற்றியுள்ள வர்களின் மரணம் என்னை எவ்வளவு தூரம் பாதித்து விடுகிறது.. உறவுகளை , உணர்வுகளை கடந்து கொண்டிருப்பதால் எனக்கு அதிகமான பாதிப்பு ஏற்படவில்லை... அழுகை வரவில்லை...
கடந்தசில தினங்களாக என் கவிதை எனக்குள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்த்ருக்கிறாள் ... என்ன செய்ய வென்று தெரியவில்லை... நினைவில் அப்படி இருந்தாலும் நிஜம் என்னை சுட்டு விடுகிறது... கவிதை எங்கு எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை... அவளை தேடவும் பிடிக்கவில்லை... நான் தான் இப்படி பிடிக்காத உறவுக்காய், என்னை உணர்த்த முயற்சித்து என்ன ஆக போகிறது...
நான் அறிந்த வரையில் இங்கெ இந்த உலகத்தில் மனித உணர்வுகளுக்கு மதிப்பு தருவதில்லை. .. கண்ணுக்கு தெரியாத சமுதாயம் சில கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது... அதன் பின்னாலே எல்லா மனிதர்களும்... சுய சிந்தனை இல்லாத மனிதர்களைத்தான் சந்தித்து வந்திருக்கிறேன்...
என்னுடைய மன அலைவரிசைகளுக்கு ஏற்ற வகையில் என்னுடைய வாழ்க்கை துணை அமையுமா?? தெரியவில்லை... பாவம் என்னைக் கட்டிக் கொண்டு என்ன பாடுபடபோகிறாலோ தெரியவில்லை. ..
ஷைலஜா பற்றி திடீரென்று தோன்றுகிறது... எனக்குள் நானே சிரித்து கொள்கிறேன்... உறவுகளுக்கான வாய்ப்புகள் இல்லாத பொது அதை பற்றி நினைத்து என்ன ஆக போகிறது...
எல்லாம் மாயை சர்வம் கிருஷ்ணார்ப்பணம் .. விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா...

Sunday, August 31, 2008

தொடர்ந்து கொண்டே இருக்கும் கதைக்களம் ...

இது ஒரு தொடர் கதை... கதைகளுக்குரிய இலக்கணம் எதுவும் இல்லாமல் கால் போகும் போக்கில் செல்லும்... முதலில் இதற்கு கதைக் கலாம் கிடையாது.. கதையில் வரும் பாத்திரங்கள் அறிமுகம் கிடையாது...
குட்டி மீண்டும் மீண்டும் யோசித்து கொண்டே இருக்கிறான்.. என்ன செய்ய? எதுவும் தெரியவில்லை? இப்போது எல்லாம் அவனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அந்த யோசனை மட்டும்தான். . சில சமயங்களில் அவன் வாய் விட்டு பேசுவதற்கும அதுதான் உதவியாக இருந்தது... இருக்கிறது..
குட்டிக்கு என்று மனம் இல்லை என்றால்.. அவனுடைய கற்பனை இல்லை என்றால்.. சில சமயங்களில் நினைத்து பார்க்கவே பயப்பட்டான்.. எல்லாம் அவன் தேடிக் கொண்ட விதி...
வேலை.. முடிந்த பிறகு நண்பர்கள்.. இரவில் தூக்கம் வராமல் எதையாவது செய்து கொண்டிருப்பது... இப்படியாக அவனுடைய நிகழ்காலம் கழிந்து கொண்டிருக்கிறது...
ஷைலஜாவின் அழுத வார்த்தைகள் சில நேரங்களில்.. மனதின் அடியாழத்தில் இருந்து எழும்போது கண்களில் கண்ணீர்... ஆனாலும் மனது நிறைந்திருக்கிறது..
கவிதா அவனை பிரியும் பொது இருந்த துக்கம்... இப்போது இல்லை.. என்னிடம் பேச முடியாது.. நான் உங்ககிட்ட இனிமேல் பேச மாட்டேன்... நடிக்கவில்லை... உண்மையான திறந்த மனதுடன் சொல்லும் பொது அவளை அறியாமல் குரல் தழுதழுத்தது... அந்த நிமிடத்தில் குட்டி அழுதான்.. நீண்ட நாட்கள் கழித்து பிறருக்காக அழுதான்.. அதில் அவனுடைய சுய நலமும் இருந்தது.. எந்த ஒரு தொடர்பின் காரணமாக இந்த ஒரு வருட காலம் தனிமையை மறந்து இருந்தானோ, அது மீண்டும் வருவதை நினைத்து அழுதான்.. தனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தான் இறைவன் என்று அழுதான் ..
அந்த சம்பவங்கள் முடிந்து விட்டன.. இப்போது மறுபடியும் வேலை... வேலைக்கான நண்பர்கள் என்று அவனுடைய பொழுது கழிந்து வருகிறது...
அவனை சராசரியான மனிதனாக இருக்க சொல்லி தோழி ஒருத்தி கேட்டால்... அவன் கூறினான்.. என்னை கடவுள் சராசரி மனிதன் போல படித்திருந்தா நானும் சராசரியாக இருந்திருப்பேன் என்று..
பணம், புகழ் எதுவும் இல்லாமல் இருந்து விடலாம்.. ஆனால் வாழ்க்கைக்கான ஒரு பிடிப்பு இல்லாமல் எப்படி நாட்களை கடத்துவது என்று யாராவது சொல்லிக் கொடுத்தால் தேவலை...
எல்லாமும் வெறுத்து விட்டது போன்ற விரக்தியான நிலை.. ச்சீ என்னடா வாழ்க்கை என்ற அங்கலாய்ப்பு .. அங்கலாய்ப்பு இருந்து என்ன செய்ய...

Sunday, June 29, 2008

ஏன் அழ வைத்தாள்

நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு கலவையான ஊர் நான் பிறந்தது... கிட்டத்தட்ட அது ஒரு அழகிய கடல் சூழ்ந்த ஊர் .... என்னுடைய பிறப்பு அங்கேதான் நடந்தது... ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்த ஊரை பற்றி, நண்பர்களை பற்றி எழுதுவதில்தான் எத்தனை எத்தனை ஆர்வம்... குட்டி ஒரு வயது வரை சாதரணமாக மிகவும் சாதாரணமாக மற்றவர்களை போலத்தான் இருந்தான்... அவனுக்குள் மாற்றம் விளைவித்தது எது??? தெரியவில்லை... அவனுடைய சூழ்நிலை அப்படியாகத்தான் இருந்தது...
ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர் வினை ,,, நேர்வினை உண்டு என்பது எல்லாம் அறிவியல் மட்டும் இல்லை.. வாழ்க்கையிலும் தான் என்பது இப்போது புரிகிறது.. ஆனால் அது காலம் தாழ்ந்து வந்ததாக இருக்கிறது.,.
என்னை பற்றி எனக்குள் என்னைத் தேட முக்கிய காரணமாக இருந்தது எனக்கு கிடைத்த தனிமை... ஏதாவது ஒன்றை தேடி கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும் என்ற தன்முனைப்பு...
ஒரு காலத்தில் என்னுடைய காதல் ... நான் கவிதை மீது வைத்திருந்த காதல் மட்டும்தான் முக்கியமானதாக அதுதான் வாழ்க்கையாக இருந்தது... எத்தனை எத்தனை கண்ணீர் இரவுகள்... ஆனாலும் அழுது முடிக்கும் போது மனதுக்குள் ஒரு திருப்தி இருக்கும்.... ஆனால் என்னால் உண்மையாக இருக்க முடியவில்லை.... நடிப்புதான் இந்த சமுதாயத்திற்கு பிடிக்கிறது... இதை விட்டு என்னால் விலகி செல்ல முடியவில்லை.. அதில்தான் நான் சாகும் வரை வாழ்ந்தாக வேண்டும் ... ஆகவே நானும் நன்றாக நடித்து கொண்டிருக்கிறேன். ..
எல்லாவற்றையும் விட்டு விரைவில் வெளியேற வேண்டும். ...
மாதா கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு போக வேண்டும் ... அந்த கூட்டம் , மனிதர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பு...
இது கதை எழுதுவதற்காக அல்ல... என்னுடைய உணர்வுகளை பதிந்து வைக்கிறேன்... இதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை... பிடித்திருந்தால் வாசி..

நேற்றைய தினம் மிகவும் எதிர்பாராததாக இருந்தது... எல்லாம் ஒன்றை நோக்கி... என்கிற பொது எதிர்பார்ப்புகள் எதற்காக???

எதிலும் லயிக்காத மனம்.. இதில் இருந்து எப்படி விடுபட்டு என்னுடைய மற்ற காலங்கள் கழிய போகின்றன என்பது தெரியவில்லை... நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது... இன்னும் ஏன் வாழ்க்கை??? தொடர்ந்து கொண்டிருக்கிறது..

eந்த மத கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை... எல்லாவற்றையும் நான் கடந்து கொண்டிருப்பதாக ஒரு நினைப்பு... எல்லாம் மாயை எல்லாம் மாயை...

நான் எதையும் கொண்டு வரவில்லை எதையும் எடுத்து செல்ல போவதும் இல்லை.. எல்லாமே இங்கே எனக்காக வைக்கப்பட்டிருந்தது... நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.. என்னுடைய இந்த எழுத்துக்களை உணர்வதற்கு இந்த உலகத்துக்கு நாட்கள் ஆகலாம்.. அது பற்றி எனக்கு கவலை இல்லை.. என்னுடைய மரணத்துக்கு பிறகு எது நடந்தாலும் எனக்கு தெரிய போவதும் இல்லை...

நான் இதுவரை சந்தித்த மனிதர்களில் என்னை தேடி வந்திருக்கிறேன்.. நான் மட்டும் அல்ல. ஒவ்வொரு மனிதர்களும் தங்களைத்தான் இன்னொரு, மற்றொரு மனிதர்களிடத்தில் தேடுகிறார்கள்... தங்களுடைய எண்ணங்களைத்தான் அவர்கள் மீது வைத்து எதிர்பார்ப்புக்களை உருவாக்குகிறார்கள். .. அந்தோ பரிதாபம் பெரும்பாலான சமயங்களில் எதிர்பார்ப்புகள் வெறும் கனவாக மட்டுமே , கற்பனையாக மட்டுமே இருக்கிறது என்பது தான் வேடிக்கை. ..

நான் இருக்கும் வரைதான் இந்த உலகம் இருக்கும்... மற்றவர்கள் பார்வையில் இது ஒரு தலைக்கனமான வார்த்தையாக தெரியலாம. .. ஆனால் உண்மை உணர்ந்தவர்களுக்கு என்னுடைய வார்த்தைகள் புரியும். .. அப்படியே பொருள் கொள்பவன் சாதாரணமான மனிதன்... வார்த்தைகளை கொஞ்சம் புரிய தெரிந்தவன் என்னுடைய என்ன அலைவரிசையில் ஒன்றாக இருக்கிறான்...

ஒவ்வொரு மனிதனுக்கும் தலைக்கனம், நான் என்ற கர்வம் இருக்க வேண்டும்... அது எப்படி என்பதுதான் சாதாரண மனிதனுக்கும், சாமியார்களுக்கும் உள்ள வித்தியாசம்...

கதை சொல்ல போறேன்...

கதைகள் இல்லாத குழந்தை பருவத்தை யாராவது தாண்டி வந்திருப்பார்களா என்று எண்ணிப்பார்த்தால் அதற்கான விடை இல்லை என்பதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொரு மனிதரின் என்ன ஓட்டங்கள் கதைகளாக மலர்ந்தன... ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு சூழலுக்கும் ஏராளமான கதைகள் இருப்பதாய் நினைக்கிறேன்..
சிறிய வயதில் கதை சொல்வது என்றாலே அங்கே ஒரு பாட்டி கட்டாயமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம்.. பாட்டிகளே இல்லாத இந்த நவீன காலம் கதைகள் இல்லாத வெறும் கட்டாந்த்ரையைதான் குழந்தை பருவத்திற்கு கொடுக்கிறது..
எங்க ஊரு தூத்துக்குடி பக்கம்லாம் ஏராளமான கதைகள் சொல்வார்கள்.. பனிமய மாதாவுக்கு ஒரு கதை, பேய கதை என்று பலவாறாக பட்டியல் நீளும்.. வருடங்கள் ஆக ஆக கதை சொல்வதற்கும் யாருமில்லை... அதை கேட்பதற்கும் நேரம் குறைந்துதான் போகிறது...
எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற அசை உண்டு . ஆனால் என்னால் நல்ல எழுத்தாளர்களை போல சிந்திக்க முடியாதோ என்ற எண்ணமும் உண்டு..
எழுத வேண்டும்... எழுத வேண்டும் எதை பற்றியாவது எழுத வேண்டும் என்ற எண்ணங்கள் அவ்வப்போது தோன்றினாலும், மனம் சிந்த்திக்க மறுக்கும்...

Saturday, June 7, 2008

பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத, இல்லை என்னுடைய பதிவை பதிவாக்குகிறேன்.. கடிதம் எழுதுவதில் கிடைக்கும் ஒரு சுதந்திரம் இந்த பதிவில் கிடைக்கவில்லை அதுவும் பதிவை இத்தனை நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்ததற்கு காரணமாக இருக்கலாம் ....
எதுவும் இல்லாத ஒரு நிலையை நோக்கி மனம் பயணப்பட்டு கொண்டிருக்கிறது... சில நேரங்களில் இருக்கும் சூழ்நிலையை விட்டு விட்டு போகவும் தோன்றுகிறது...
எதை எடுத்து வந்தேன்.. எதை எடுத்து செல்ல போகிறேன்... எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலகமுமாக இருக்கிறது....
குட்டி என்ற தனி மனிதனின் இந்த பதிவுகளை படிப்பதில் யாருக்கும் சுவாரசியம் இருக்காது... இது ஒரு கதையல்லவே.. இது ஒரு பயணம்... தனி மனிதனின் எண்ணங்கள்... வெறும் என்னுடைய கற்பனைக்கு வடிகாலாக இதை உருவாக்க விருப்பம் இல்லை...

Saturday, May 17, 2008

குட்டி


குட்டி
"குட்டி" இந்த வார்த்தை சில சமயங்களில் எனக்கு பிடிக்காமல் போய் இருக்கிறது.. நான் வீட்டில் கடைக்குட்டியாக பிறந்ததினால் வந்த பெயர் காரணம்... வளர வளர அதுவே சில நேரங்களில் இடைஞ்சலாக, ஒரு நெருடலை தனது என்னவோ உண்மை... பள்ளியில் ஒரு பெயர்... வீட்டில், சொந்தங்களிடத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் 'குட்டி" என்ர பெயர்தான் பரிச்சயம்.. வீட்டுக்கு என்னைத்தேடி வரும் நண்பர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது ''குட்டி"பள்ளி, கல்லூரி என்று காலங்கள் உருண்டோட குட்டி மறைந்து கொண்டே வந்தது... வேலைக்காக வேறு ஊருக்கு வந்ததும் ''குட்டி" முற்றிலுமாக மறைந்து விட்டது.... ஆனால் இப்போது சில சமயங்களில் மனதில் தோன்றும்... ''குட்டி" என்று நம்மை யாரவாது கூப்பிட மாட்டார்களா என்று... அந்த ஆற்றாமை கண்ணீரையும் வரவழைக்கிறது....

Friday, April 4, 2008

நான் என்பது எண்ணங்களின் குவியல்தான்....

இப்போதெல்லாம் எனாக்குள் பயணிப்பது எல்லா நேரத்திலும் நடக்கிறது.. கால, நேரம் இல்லாமல் எனக்குள் பயணித்து கொண்டிருக்கிறேன்.. . அப்படி உள்ளுக்குள் செல்ல செல்ல.. வெளியே அமைதி ஏற்பட்டு போகிறது... வெளியில் உள்ள உறவுகளுடன், நட்புகளுடன் பேச்சு தானாக குறைந்து வருகிறது.. ..
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்த எனக்கும் இப்போதிருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள்.. முன்பிருந்த பரிமாணத்தை தாண்டி என்னுடைய பயணம் தொடர்ந்து நடந்து வருகிறது... இப்போதிருக்கும் நானும் எப்போதும் அப்படியே இருப்பதில்லை... மாற்றம் என்ற ஒன்று மட்டுமே எப்போதும் மாறாமல் இருந்து வருகிறது..
மெது, மெதுவாக என்னுடைய என்னங்களுக்குள் போய்க் கொண்டிருக்கிறேன்.. நான் எப்படி இருந்தாலும் சரி.. அது மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது... எல்லாமுமே எண்ணங்கள்... நான் என்பதே இல்லை... வெறும் எண்ணங்களும், இந்த உலகம் எனக்கு உருவாக்கி தந்த கற்பனைகளிலும், மாயைகளிளும்தான் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். .
நடத்து முடிந்தவைகளை குறித்தும், நடக்க இருக்கும் எதிர்காலத்தை குறித்தும் மட்டுமே எண்ணங்கள்... இதை நிகழ்காலத்தில் வாழும்போது மட்டுமே உணர முடியும் என்பதுதான் வேடிக்கை... வெறும் பார்வையாளனாக இந்த வாழ்க்கையை இதுவரை கடந்து வந்த எனக்கு அப்படி இருப்பதே தேவையில்லாத ஒன்று, எனக்குள் ஒரு பயணம் இருக்கிறது அதை தேடி போக வேண்டும் என்று ஒரு உந்துதலை ஏற்படுத்தியது ஓஷோ. ..
இப்போதெல்லாம் சில நேரங்களில் நடப்பது எல்லாம் வெறும் கனவு போலவே இருக்கிறது.. கனவிலேயே வாழ்கிறேன்.. கனவிலே நடக்கிறேன்.. இந்த வாழ்க்கை வெறும் கனவுதான்.. எண்ணங்கள்தான் .... நான் என்பதும் அதுதான்... எதுவும் இங்கு நிஜமில்லை... நிஜமாக இருக்கவும் வாய்ப்பில்லை... ஹா ஹா சிரிப்பாக வருகிறது... என் உடல் சிரிக்கிறது..
நிஜத்திற்கு... நிகழ்காலத்திற்கு, நான் பயணிக்கும் போது லேசான பயம் வருகிறது.. இருத்தலுக்கும், இருப்பதிற்குமான இடைவெளி குறையும் போது வரும் உணர்வுதான் அது என்பதை உணரத் தொடங்கி இருக்கிறேன்.. விரைவில் அதற்கும் விடை கிடைத்து விடும்..

Sunday, March 30, 2008

மனது மிக பாரமாக...

மனது இன்று மிகவும் பாரமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை... எல்லாம் பழகி பழகி போய்விட்டதால் வந்த சலிப்பாகவும் கூட்ட இருக்கலாம்... இந்த உடலே ஒரு வெற்றிடம் அதை கூட என்னால் சில நேரங்களில் உணர முடிவதில்லை... எல்லாம் மாயை மாயை மாயை மாயை மாயை மாயை என்று நினைத்து அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வெளியே வரமுடியவில்லை .. வரும் வழியும் தெரியவில்லை.. . பாதையை தேடிக் கொண்டே எனது பயணத்தை தொலைத்து கொண்டிருக்கிறேன்..
எல்லா உறவுகளிலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு போனது.. என்னுடைய இந்த புதிய பரிமாணத்தின் பயணம் எதை தேடி என்பதும் புரியவில்லை..
இறைவா .. நீண்ட நாள் கழித்து உனக்கு கடிதம் எழுதுகிறேன்... என்னை என்ன செய்வதாக உத்தேசம்... என்னை பேசாமல் எடுத்து கொள்ளலாமே... நாளை என்ன நடக்கும்.. என்பதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்கிறது ஒரு மனது.. ஆனால் அதை ஏற்க மறுக்கிறது.. நாளை குறித்த பயன்களில் தவித்து கொண்டிருக்கிறது... இதில் இரண்டாவதே பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய வெற்றி கொடியை பறக்க விடுகிறது..
நிர்ணயிக்கப்பட்ட வெற்றி தோல்விகள்.. அதை அனுபவிக்கவா.. அதில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கவா... தெரியவில்லை... ஏதோ வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது.. நண்பர்களின் உற்சாகமும் என்னுடைய பரிதவிப்புமாக காலம் மெதுவாக கரைந்து கொண்டு இருக்கிறது... எங்கே வாழ்க்கை தொடங்கியது அது எங்கே எப்படி முடிய போகிறது என்பது புரியவில்லை.. எல்லா உறவுகளும் போலித்தனத்தை ஒரு முகமுஉடியை கையில் வைத்து கொண்டு இருப்பதால் எல்லாமுமே விரைவில் வெகுவிரைவில் நீர்த்து போகின்றன.. ..
உள்ளே பயணிக்கிறேன்... மெது மெதுவாக தொடர்ந்தது அது மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.. என்னையும் அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது... இறைவா இன்றைய நாள் இனியதாக கழிந்தது.. அதற்காக உனக்கு நன்றி... இனிமேல் வரும் காலங்களுக்கும் உனக்கு நன்றி.. விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா... என்னுடைய அன்பான அப்பாவின் வாசகங்கள் அதை எளிதில் விட்டு விட தோணவில்லை..

Tuesday, March 25, 2008

காற்றின் போக்கில்...

காற்றின் அலைவரிசை கேட்கிறதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழி கின்றதா நெஞ்சம் நனைகின்றதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ,...
--- இந்த கவிதை வரிகளை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்த்திய காலங்களை நினைத்து பார்க்க தோன்றியது... எல்லாம் எதற்காக. ... என்னுடைய முட்டாள் தனமான காதலே என்னை எனக்குள் சிந்திக்க வைத்தது... என்னை திரும்பி பார்க்க வைத்தது... ஒரு வேளை என் கவிதா என்னுடைய வாழ்க்கையில் வராமல் போய் இருந்தால் என்னை நான் உணர தொடங்கி இருக்க மாட்டேன் ... நடந்தவைகள் எல்லாம் மிக நன்றாக நடந்தன.. நடக்கின்றவைகளும் கூடத்தான்.. எதிர்காலத்தை பற்றி தெரியாது... அதை பற்றிய கவலைகளும் இல்லை...
வாழ்க்கை அதன் போக்கில் அதனுடைய இசையை மீட்டிக் கொண்டிருக்கிறது.. அதன் சுகந்தத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறேன்... ஒவ்வொரு வினாடிகளும் மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
ஒரு காபி குடிப்பதை போலத்தான் என்னுடைய இத்தனை காலமும் போனது.. ஒரு குவளை காப்பி நம்முடைய கையில் கொடுத்தவுடன் இருக்கும் சூட்டில் அதன் சுவை தெரியாது... மிக மெதுவாக அது ஆற தொடங்கும் போது அதன் சுவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கும்.. முழுமையாக உணரத் தொடங்கும் போது வெறும் குவளை மட்டுமே கையில் இருக்கும்... ஹா ஹா ஹா .. எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்தால் சிரிப்பாக வருகிறது...
என்னுடைய பயணம் எதை நோக்கி செல்கிறது... நிறைய விடைகள் என்னிடம் ஆனால் விடைக்கான வினாக்கள் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன..
சுற்றியிருக்கும் மனிதர்களிடம் எதுவும் இல்லை.. ஆனால் அவர்களிடம்தான் எல்லாம் இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது... என்னுடைய இந்த பிளாக்கை படிப்பவர்களுக்கு '' என்னாடா இது ஒரு , ஏதோ ஒரு பைத்தியம் டைப் பண்ணியிருக்கு போல அப்படின்னு தோனும்... தோணனும் அது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படுவதே இல்லை.. இது வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைத்த, கவிதைகள் புதைந்த , கருத்து செறிவு கொண்ட ஒரு மனிதனின் எழுத்துகள் இல்லை.. அப்படி எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்... மனதுக்கு எதை எழுத தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டு போகிறேன்...
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்... அதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே .. இப்படியாகத்தான் இருக்கும்.. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த போலியான முகமூடி போட்டிருக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒரு நடிகனாக, கை தேர்ந்த நடிகனாக நடித்து கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை...
விரைவில் வெகு விரைவில் இந்த வாழ்க்கையை விட்டு என்னுடைய இறைவனைத் தேடி பயனிக்கணும்.. இந்த இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே வாழ்ந்து முடிந்த சலிப்பு.. இது இப்படியாகத்தான் இருக்கும் என்று தெரிந்து போனவுடன் அதைப் பற்றிய தேடல் இல்லாமல் போகிறது...
என்னுடைய இந்த பதிவுகள் என்பவையே ஒரு முட்டாள் தனமான விஷயம் இல்லையா... இருக்கும்.. இருந்து விட்டு போகட்டும்..

Thursday, March 20, 2008

நானும் மதங்களும்...

நான் இந்து சமயத்தில் பிறந்ததாக கூறி வளர்க்கப்பட்டவன்... என்னுடைய மதம் எனக்கு எல்லாவித சுதந்திரங்களையும் தந்திருக்கிறது... ஆனால் நான் மதவாதி இல்லை. மதங்களின் சடங்குகளையும், அதன் புராணக்கதைகளையும் நான் நம்புவதில்லை .. ஆனால் இந்து மதத்தின் தாத்பரியங்கள், என்னை வியக்க வைத்திருக்கின்றன... என்னுடைய மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காதது எனக்கு பிடித்திருக்கிறது...
அனைத்து மதங்களில் இருந்தும் எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொண்டிருக்கிறேன். . பகவத் கீதையும் , பைபிளையும் படித்திருக்கிறேன்... இரண்டின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது... எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்... எல்லாம் மாயை ... கீதை .. சூரியனுக்கு கீழே செய்யப்படுகின்ற எல்லாவற்றையும் மாயை என்று கண்டேன் - பிரசங்கி (பைபிள்)
ஆனால் இந்த மதங்கள் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால் இத்தனை சண்டை சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் என்று எதுவும் இருந்திருக்காது... உலகத்தில் தற்போது நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மதங்களும் அதை ஆட்டுவிக்கிற மடாதிபதிகளும், பாதிரியார்களும் தான் குற்றவாளிகள்... இறைவனை தேடி ஏன் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்??
எது உங்களை ஓட சொல்லியது... நீங்கள் சார்ந்து இருக்கும் இந்த சமுதாயம் போலியான பல முகங்களை கொண்டிருக்கிறது... நீ உன்னை பற்றி அறிந்து கொள்ள கூடாது ... அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உனக்கு வழஅங்கப்படக் கூடாது என்பதில் மதங்கள் முதன்மையாக இருக்கின்றன...
துதித்து கொண்டாடப்பட வேண்டிய கடவுள் ஏன் ? நாம் செய்யும் குற்றங்களை தண்டிக்கும் ஒருவராக மாறியது ஏன்? அவரை அந்தளவுக்கு கொடுமையானவராக மாற்றியது யார் குற்றம்? ஏன் உங்களுடைய கடவுளை கும்பிட கோவிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள்... இ து கடவுள் மறுப்பு கொள்கை அல்ல.. அவரை மாற்றியது யார்?? இதை சொல்வது யார்?
எல்லாம் இந்த சமுதாயம்... அதை உருவாகிய மதவாதிகள்தான்... எல்லா மதத்தையும் தான் நான் குறை சொல்கிறேன்.. .. உன்னுடைய அன்பான கடவுள் மனிதர்கள் உருவாகிய கோவில்களில் மட்டும்தான் இருப்பாரா? அன்பான கடவுள் உன்னிடம்தான் இருக்கிறார். .. ஆனால் எந்த ஒரு மனிதனும் கடைசி வரை அதை உணர்வதில்லை... உணர்வதர்காகவும் அவனை இந்த சமுதாயமும், அவனை சுற்றியிருக்கும் அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் அனுமதிப்பதில்லை..
ஒரு குழ்ந்தை பிறக்கிறது... அந்த குழந்தை அதுவின் போக்கில் வளருகிறதா???? இல்லை அவன் பெற்றோர், உறவினர்கள் என்று அவனை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்துதான் விஷயங்களை கற்கிறான்.. ஆனால் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்கள் ஒரு பரிபூரனமானதாக இருக்கிறதா??? இல்லை.. எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறார்களே தவிர அவனை அவனாக வாழ விடுவதில்லை... குழந்தைக்கு உரிய மதிப்பை மரியாதையை கொடுக்கவில்லை... தன்னுடைய குழந்தை இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்... ஆனால் உண்மையான ஒரு விஷயத்தை மறந்துவிட்டு... அதே சமயம் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் அவனுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பொது அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான்... நான் யார்? என்ர கேள்வி அவனில் எழும்பினாலும் விடை தேடும் வழி இல்லை... அம்மணமாக இருக்கும் ஊரில் ஆடை அணிந்தவன் கோமாளி ஆகிவிடுகிறான் என்பதை போல ஆகவும் அவன் விரும்புவதில்லை... எனவே அவன் தன்னுடைய நடிப்பை தொடர்கிறான் இறக்கும் வரை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நடிப்பை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன் ... தொடர வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன... ஒரு நாள் என்னுடைய இந்த நடிப்பு முழுமையாக நின்று போகும்.. அந்த நாள் நான் ஒரு பைத்தியமாக கூட தெரியலாம்.. அது பற்றிய கவலை இல்லை....



''குட்டி" இன்னும் முடிக்கவில்லை... தன்னுடைய பயணத்தை தனக்குள்ளே தொடர்ந்து கொண்டு இருக்கிறான்....

Tuesday, March 18, 2008

நான் வெற்றிடம் தான்

என்னை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் .... எனக்குள்ளே
பயணம் முழுமையாக தொடங்கி இருக்கிறது... வெறும் வெற்றிடத்தை நோக்கிய பயணம் அது... மெதுவாக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு கணமும் முழுமையாக அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன...
ஒரு வேளை என்னை கண்டுபிடிக்கும் இந்த முயற்சியில் நான் , என்னை என்னுடைய ரூபத்தை இழ்ந்து விடலாம்... அதை பற்றிய பயம் இல்லை... எல்லாவற்றையும் கடந்து கொண்டிருக்கிறேன்.. ஐஸ் உருகுவது போல் என் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் உருகி வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.....
பிரிந்து போன.. மறைந்து போன உறவுகளுக்காய் ஏங்கிய மனசு.. இப்போதெல்லாம் அதை நினைத்து பார்ப்பதே இல்லை...
இதுவும் வாழும் கலைதான்.... வாழ்க்கையை தேடிய எனது பயணம் தொடங்கிவிட்டது.... இந்த பிளாக் படிப்பவர்களுக்கு என்னுடைய இந்த வார்த்தைகள், சிந்தனைகள் புரியாது... விளங்காது... யாருக்கும் புரிய வேண்டியதில்லை... புரியவும் kUdaadhu

Sunday, March 16, 2008

நான் யார்?

ஏன்? இந்த வாழ்க்கை... எதை தேடி என்னை போக வைக்கிறது.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எதையும் நான் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை... இனிமேல் தெரியுமா அதுவும் எனக்கு தெரியாது... இறைவா உனக்கு நான் கடிதம் எழுதிய அந்த நாட்களை தேடிபார்க்கிறேன்.
எல்லாம் நன்றாக இருந்ததாக எனக்குள் நினைப்பு ....
இது ஒரு பைத்தியத்தின் பிளாக் ,,,,

புதிய பரிமாணத்தில் ...

புதிய ஒரு பரிணாமத்தை நோக்கி என்னுடைய பயணம் தொடங்கியிருக்கிறது... இறைவா ... நன்றி.
வாழ்ந்த வாழ்க்கைக்காக வருத்தம் இல்லை.. எதிர்காலத்தை நோக்கிய பயம் இல்லை... இன்று இப்பொழுது என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது...
கவிதை எங்கோ தொலைந்து போனாள்... என்னை சுற்றிலும் தற்போது புதிய நட்பு வட்டம்... புதிய மனிதர்கள்... இந்த புதிய மனிதர்களிடம் இருந்தும் தப்பித்து செல்ல மனம் விரும்புகிறது...
எங்கேயாவது மனிதர்கள் இல்லாத இடம்... என்னுடைய இறைவனை தேடி.. போக வேண்டும்.. முகமூடி இல்லாத மனிதர்கள் இல்லாமல் எந்நாளும் என்னுடைய முகமுஉடியையும் கழஅட்ட முடியாத நிலைமைதான் நிஇடிக்கும்