Sunday, October 26, 2008

என் வீடு இறந்து கொண்டிருக்கிறது...

வீடு என்பது வெறும் கட்டிடங்கள் மட்டும் இல்லை. அதற்கும் உயிர் உண்டு... நாம் எத்தனை வருடங்கள் அதில் வாழ்கிறோமோ, அத்தனை வருங்களும் அந்த வீடும் உயிர்ப்புடன் இருக்கும்... வீட்டை விட்டு விலகி செல்ல செல்ல அந்த வீடு இறக்க தொடங்குகிறது... தூத்துக்குடியில் நான் இருந்த வீட்டுக்கும் அதே கதி தான் நெருங்கி கொண்டிருக்கிறது...
நான் பிறந்த வருடங்களில் வீடும் என்னுடன் வளர்ந்தது என்னுடைய முதல் வயதில் நான் அந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.., விசாலமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் எங்களின் குடும்பத்திற்கு அந்த வீடே போதுமானதாக இருந்தது.. அம்மாவின் தயவால் வீட்டை சுற்றிலும் நிறைய பூஞ்ச்செடிகள் இருந்தன..
மொத்தம் ஐந்து செண்டு நிலமுள்ள வீட்டின் பக்கத்தில் நிறைய இடம் உண்டு... அங்கு ஒவ்வொரு சின்ன சின்ன இடங்களும் எனக்கு பரிச்சயம்... அம்மாவின் இறப்பு, அப்பாவின் இறப்பு, கவிதாவுக்கான நான் ஏங்கி அழுதவை, என்னுடைய இருபத்து நான்கு வயது வரையிலான அதிகபட்ச சந்தோசம், துக்கம், பரபரப்பு என எல்லாவற்றையும் என் வீட்டின் ஒவ்வொரு சுவரும் நன்றாகவே அறியும்...
அம்மா இறந்த போது வீட்டுக்கு கொஞ்சம் உடல் நலம் பாதிக்கப்பட்டது... அதை பேணுவதற்கு யாரும் இல்லை... பூஞ்ச்செடிகள் இருந்த இடம் வெறுமனே இருந்தது.... அப்பா இறந்த சமயத்தில் வீட்டுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டது.. அங்கு முனிப்பாய்ச்சல் இருப்பதாகவும், பேய நடமாட்டம் இருப்பதாகவும் சுற்றியிருப்பவர்களின் புலம்பல் அதற்கு கேட்டிருக்குமோ என்னவோ அதன் பிறகு அது உயிர் தன்மையை இழந்தது ...
நான் பிறந்ததில் இருந்தது அந்த வீட்டுக்குள்ளேஎ வாழ்ந்து விட்டேன்.. இப்போது வேலைக்காக ஊர் மாற்றி வந்தாலும்... ஊருக்கு செல்வதே அந்த வீட்டில் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான்... அங்குதான் என் அன்பான அம்மா, அப்பாவின் உணர்வுகள் மிச்சமிருக்கின்றன...
பள்ளி, கல்லூரி நண்பர்கள் என எப்போதும் என் நண்பர்களிடத்து அந்த வீடு முக்கியத்துவம் பெற்றது... படம் பார்க்க செல்வதென்றாலும் சரி, படிப்பதேன்றாலும் சரி, ஊருக்கு செல்வதென்றாலும் சரி அந்த திட்டங்கள் எல்லாம் என் வீட்டின் மாடியில் இருந்தே தீட்டப்படும். .
இப்போது அதை சீண்டுவார் யாரும் இல்லை. . அதை பராமரித்து அன்பு காட்ட யாரும் இல்லை என்று என் வீடு தன்னைத் தானே தற்கொலை செய்யும் அளவுக்கு போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... வீடு இறக்க தொடங்கியிருக்கிறது... நான் பிறந்து வளர்ந்த இடம் சிதிலமடைய தொடங்கியிருக்கிறது... வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது என்னால்ல்ல்ல்.....
விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா....